வீரயுக நாயகன் வேள் பாரி - 11

வீரயுக நாயகன் வேள் பாரி - 11 அத்தியாயம் 11: இருள் விலகாத இரவின் கடைசி நாழிகையில், கபிலரை எழுப்ப அவரது அறை நோக்கி வந்துகொண்டிருந்தான் வீரன் ஒருவன். அவனது காலடி ஓசை மிகத் தொலைவில் இருந்தே கேட்கத் தொடங்கியது. படுக்கையில் இருந்து மெள்ள அசைந்தார். ஓசை, அறைக்குள் நுழைவதற்குள் எங்கு இருந்தோ வந்த மலரின் மணம் அவரது மூக்குக்குள் ஏறியது. சற்றே மூச்சை இழுத்து முகர்ந்தார். காலடி ஓசை அருகில் வந்து நின்றது. நள்ளிரவில் மலரும் மயிலை மலரின் மணம். நள்ளிரவு மலருக்கு எனத் தனிக் குணங்கள் உண்டு அது வண்ணங்களை எல்லாம் வாசனையாக்கி ஒளி வீசக்கூடியது. ஆம்பலும் முசுண்டையும் நள்ளிரவிலே பூப்பவை. ஆனாலும், மயிலையின் தனித்துவ மிக்க வாசத்துக்கு அவற்றை இணைசொல்ல முடியாது. மயிலையின் மணம் அறை எங்கும் பரவியது. காட்சிக்கு முன்பே நறுமணத்தால் இதயம் நிரம்பியது. அகமகிழ்வோடு கண் விழித்தார் கபிலர். மலர்க் கூடையை அறையில் வைத்துவிட்டு ஒரு பெண் வெளியேறினாள். அருகே வந்த வீரன் சொன்னான், “பறம்பின் தலைவர் உங்களை அழைத்துவரச் சொன்னார்”. மலர் மணத்தோடு இணைந்தது இனியவனின் அழைப்பு. சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார். மாளிகையின்...