வீரயுக நாயகன் வேள் பாரி - முன்னுரை

 வீரயுக நாயகன் வேள் பாரி

முன்னுரை 

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.




தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், ெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல… தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…


Source 

Comments

Popular posts from this blog

வீரயுக நாயகன் வேள் பாரி - 1

வீரயுக நாயகன் வேள் பாரி - 11

வீரயுக நாயகன் வேள் பாரி - 6